அருள்மிகு மனத்துனைநாதர் திருக்கோவில்,வலிவலம் திருக்குவளை




வலிவலம்

 *புராணப்பெயர்* 
திருவலிவலம், ஏகச்சக்கரபுரம்
 *மூலவர்*
மனத்துணைநாதர் (இருதய கமலநாதர்)
 *தாயார்*
மாழையொண்கண்ணி
 *தலவிருட்சம்* 
புன்னை
 *தீர்த்தம்* 
 சக்கர தீர்த்தம்
 *பாடல் வகை* 
 தேவாரம்
 *பாடியவர்கள்* 
அப்பர், சம்பந்தர், சுந்தரர்

 *தலவரலாறு*

முன்னொரு காலத்தில் ஒழுக்க சீலனாக விளங்கிய ஒருவன், முன் வினைப்பயனால் சில பாவங்கள் செய்தான். இதனால் அவன் அடுத்த பிறவியில் கரிக்குருவியாக பிறக்க நேரிட்டது. மிகச்சிறியதான இப்பறவையை பெரிய பறவை ஒன்று தாக்கியதால் ரத்தம் வந்தது.  காயமடைந்த குருவி அருகிலிருந்த மரத்தில் தஞ்சம் அடைந்தது. அந்த மரத்தின் கீழ் முதிய சிவயோகி ஒருவர் அடியார்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அந்த உபதேசங்களை தற்செயலாக கரிக்குருவியும் கேட்டது. அன்பர்களே! சிவத்தலங்களில் சிறந்தது மதுரை. தீர்த்தங்களில் சிறந்தது அங்கிருக்கும் பொற்றாமரை குளம். மூர்த்திகளில் சிறந்தவர் மதுரை சொக்கநாதர். மதுரைக்கு சமமான தலம் உலகில் வேறொன்றும் இல்லை. சோமசுந்தரக்கடவுள் தன்னை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் வேண்டும் வரங்களை அள்ளித்தருபவர் ”என்று யோகி சொல்லிக்கொடுத்ததை கரிக்குருவி கேட்டது. ஞானம் பெற்றது. பின்னர் தனது முன்பிறப்பையும், தான் ஏன் கரிக்குருவியாக பிறந்தோம் என்பதை அறிந்து மதுரையை நோக்கி பறந்தது. மதுரையை அடைந்த குருவி சோமசுந்தரர் கோயிலை வலம் வந்து பொற்றாமரைக்குளத்தில் மூழ்கியது. சிவனை உருகி வழிபட்டது. மூன்று நாட்கள் இவ்வாறு தொடர்ந்து செய்தது. குருவியின் பூஜைக்கு இறைவன் மகிழ்ந்தார். குருவியை அழைத்து அதற்கு “மிருத்தியுஞ்சய" மந்திரத்தை உபதேசித்தார். கரிக்குருவியின் சிற்றறிவு நீங்கி பேரறிவு பெற்றது. மேலும் குருவி சிவனிடம், ”இறைவா! நான் உனது கருணையால் ஞானம் பெற்றேன். இருந்தாலும் ஒரு குறை உள்ளது. 
மிகச்சிறிய பறவையாகிய நான் மற்ற பெரிய பறவைகளால் துன்புறுத்தப்படுகின்றேன். பார்ப்பவர்கள் கேலி செய்யும் நிலையில் உள்ளேன் என முறையிட்டது. அதற்கு சிவபெருமான், ”எல்லாப் பறவைகளை விட நீ வலிமை அடைவாய்” என கூறினார். மீண்டும் குருவி, ”சிவபெருமானே! எனக்கு மட்டுமின்றி, எனது மரபில் வரும் அனைவருக்கும் வலிமையை தந்தருள வேண்டும்” என வேண்டியது. இறைவனும் அவ்வாறே அருளினார். இவ்வாறு வரம்பெற்ற கரிக்குருவி “வலியான்" என்னும் பெயரையும் பெற்றது. இக்குருவியின் மரபில் தோன்றிய ஒரு குருவி இத்தலம் வந்து மனத்துணை நாதரை வழிபட்டு முக்தி அடைந்தது. இதனால் இத்தலத்திற்கு வலிவலம் என்ற பெயர் ஏற்பட்டது.

 *ஆலய அமைப்பு*

கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்த அழகிய மாடக்கோயில்.  முகப்பு வாயிலின் மேற்புறத்தில் சுதையினாலான ரிஷபாரூடர், வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்த முருகர், மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் ஆகியோரின் சுதை சிற்பங்கள் உள்ளன. அடுத்து உயரமான தூண்களுடன் கூடிய முன் மண்டபம் உள்ளது. மண்டபத்தில் கொடிமரம், கொடிமர விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளது. வலதுபுறம் அம்பிகை   மாழையொண்கண்ணி சந்நிதி அமைந்துள்ளது. அம்பிகை தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அடுத்து உள்ள 3 நிலை கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நேரே விநாயகர் சன்னதி உள்ளது. அருகே கட்டுமலை மீது செல்ல படிக்கட்டுகள் உள்ளன. மூலவர் இருதய கமலநாதர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எருந்தருளியுள்ளார்.    மண்டபத்தில் நடராஜர் தனி சன்னதியில் தெற்கு நோக்கி உள்ளார். மூலவரின் இடதுபுறம் சோமாஸ்கந்தர் சன்னதி உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லிங்கோத்பவர் உள்ளனர். உள் பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, காசிவிசுவநாதர், அறுபத்து மூவர், நவக்கிரகங்கள், பைரவர், சண்டேசுவரர் ஆகிய சந்நிதிகள் உள்ளன.  
 முதல் பிரகாரத்தில் 
சண்டேஸ்வரி, பிடாரி அம்மன், ஐயனார் சன்னதிகள் உள்ளன. தலவிருட்சமும் அதன் கீழே நாகர் சிலைகளும் உள்ளன. ஆலயத்தின் மூன்று புறமும் தீர்த்த குளம் உள்ளது.
    
 *அமைவிடம்* 

கீழ்வேளூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலை வழியில் உள்ளது இவ்வாலயம். பேருந்து வசதி உள்ளது.

 *ஆலய முகவரி*

அருள்மிகு மனத்துனைநாதர் திருக்கோவில்,
வலிவலம் அஞ்சல்,
திருக்குவளை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்,
 *610 207.* 

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 *சிறப்பு*

கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் ஒன்று.

சூரியன், வலியன், காரணமாமுனிவர், பாண்டவர்கள், கோச்செங்கட்சோழன், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்ட தலம்.

இருதயம் சம்பந்தப்பட்ட நோய், மனக்கலக்கம், புத்திசுவாதீனம் இல்லாதவர்கள் வழிபட வேண்டிய ஆலயம்.

“பிடியதன் உருவுமை" என தொடங்கும் பாடல் இத்தல வலம்புரி விநாயகரை போற்றி சம்பந்தர் பாடியது.

கோயிலைச்சுற்றிக் (கிழக்குப்பக்கம் தவிர) அகழி சூழ்ந்திருக்கிறது.


Comments

Popular posts from this blog

உலகின் முதல் சிவன் ஆலயம் - உத்தரகோசமங்கை பற்றிய சிறப்புத் தகவல்கள்

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில்.மாசி பிரமோற்சவம் 7 ஆம் திருநாள், இரவு தங்க கிளி வாகனம் 13-2-2022 Kanchipuram Arulmigu Sri Kamakshi Amman Temple.Masi Brahmotsavam Day 7, night Thanga kili vaganam 13-2-2022