சேலம் ஸ்ரீ சுகவனேசுவர் திருக்கோயில்

சேலம் ஸ்ரீ சுகவனேசுவர் திருக்கோயில்

பாவங்கள் அனைத்தையும் போக்கி, திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் அருளும் சேலம் ஸ்ரீ சுகவனேசுவர்.
சேலம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருத்தலம்.  
நான்கு யுகங்களாகப் பிரசித்திப் பெற்ற திருத்தலம்.
திருத யுகத்தில் நான்மறைகள் அரச மர வடிவில் பூஜித்து தேவர்களின் பாபங்களைப் போக்கியதால் பாபநாசம் என்றும், துவாபரயுகத்தில் ஆதிசேஷன் வழிபட்டதால் நாகீச்சுரம் என்றும், திரேதாயுகத்தில் காமதேனு பசு வழிபட்டதால் பட்டீசுரம் என்றும், கலியுகத்தில் கிளி உருவம் கொண்ட சுகபிரம்ம மகரிஷி வழிபட்டதால் சுகவனம் என்றும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டதால் மும்முடித் தலைவாயில் என்றும் சிறப்புப் பெற்ற திருத்தலம்.  
கவனேசுவரர், கரபுரநாதர், வீரட்டேசுவரர், பீமேசுவரர், திருவேலிநாதர் என்ற ஐந்து அட்சரங்களைப் பெற்ற திருமணிமுத்தாறு நதிக்கரையில் சுயம்புலிங்கமாக எழுந்தருளி  பஞ்சாட்சர நாதம் என்னும் சிறப்பைப் பெற்ற திருத்தலம்.
ஒரு முறை பிரம்மா படைப்பின் இரகசியத்தை சுகமுனிவரிடம் கூற, சுகமுனிவர் பிரம்மா கூறிய அந்த படைப்பின் இரகசியத்தை சரஸ்வதி தேவியிடம் கூற,  இதனையறிந்து சினம் கொண்ட பிரம்மா, சுகமுனிவர் கிளியாகப் பிறக்கக் கடவது என்று சபித்து விட்டார். கிளியுருவம் பெற்ற சுகமுனிவர் பூலோகம் வந்து, கிளிகள் கூட்டமாக வாழ்ந்துகொண்டிருந்த சுகவனத்தை அடைந்தார்.  அங்கே ஒரு புற்றின் அடியில் வெளிப்பட்ட சிவலிங்கத்தை  நெல் மணிகளால் பிற கிளிகளுடன் சேர்ந்து தானும் வழிபாடு செய்து வந்தார்.  அந்த சமயத்தில் வேடன் ஒருவன் கிளிகளைத் தாக்க எத்தனிக்க, அனைத்து கிளிகளும் அந்த புற்றினுள் சென்று மறைந்தன.  இதனால் கோபடைந்த வேடன், அந்தப் புற்றினை வெட்டி எறிந்தான்.  அப்போது, புற்றுக்குள்ளிருந்த சிவலிங்கத் திருமேனியைக் காக்கும் பொருட்டு சுக முனிவர் தனது இறகுகளால் அங்கிருந்த சிவலிங்கத் திருமேனியை மூடி மறைக்க முயற்சிக்க, அதற்குள் வேடனின் வெட்டு அந்தச் சிவலிங்கத் திருமேனியில் பட்டு இரத்தம் கொப்பளித்தது.  அதனைக் கண்டதும் வேடன் மயங்கி விழுந்தான்.  அப்போது அங்கே காட்சி தந்த சிவபெருமான், சுக முனிவரின் சாபத்தை விலக்கியதோடு மட்டுமல்லாமல், வேடனுக்கும் திருவருள் புரிந்தாராம். எனவே இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு சுகவன ஈசுவரர் என்று திருநாமம். வேடனால் வெட்டுண்ட வடுவவை இன்றும் அபிஷேகத்தின் போது சிவலிங்கத் திருமேனியில் காணலாம் என்பது சிறப்பு. சிவலிங்கத் திருமேனியும் சற்றே சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.
இத்திருத்தல விநாயகர், விகடசக்கர விநாயகர் என்ற  திருநாமத்தோ அருள்பாலிக்கிறார். இந்த விகடசக்கர விநாயகருக்கு என்ன சிறப்பு தெரியுமா?  வீரபத்திரர், தக்கனின் யாகத்தை அழித்தபோது அவரை எதிர்கொண்ட திருமால் தனது சக்கரத்தை எறிய, அவர் அணிந்திருந்த கபால மாலையில்  ஒரு தலை அந்தச் சக்கரத்தைக் கவ்விக்கொண்டது.   அதனைக் கண்ட விநாயகர் கூத்தாடி நடனமாடியபோது அதனைக் கண்டு திருமாலின் சக்கரத்தைக் கவ்வியிருந்த அந்த தலை நகைக்க, சக்கரம் அந்த தலையின் வாயிலிருந்து விடுபட்டு கீழே விழுந்தது.  அதனை எடுத்துக்கொண்டு களிப்பில் ஆடியவரே  விகடசக்கர விநாயகர் ஆவார்.
அருணகிரிநாதரும் இத்திருத்தலத்து முருகப் பெருமான் மீது “பரிவுறு நாரற் றழல்மதி வீசச்  சிலைபொரு காலுற் …… றதனாலே” . . . என்னும் திருப்புகழைப் பாடியுள்ளார்.
இத்திருத்தலத்தில் அமைந்துள்ள நவக்கிர சந்நிதியில் செவ்வாயும் ராகுவும் இடம் மாறி அமைந்துள்ளது விசேஷமானதாகக் கூறப்படுகிறது.
தேவர்கள் அரச மர வடிவில் வழிபட்டதும், ஆதிசேஷனுக்கும், சேரமான் பெருமானுக்கும்  எம்பெருமான் தாண்டவ தரிசனம் அளித்ததும், தமிழ் மூதாட்டி ஔவையாரின் வளர்ப்பு மகளான பிறவி என்பவரின் திருமணத்தை மூவேந்தர்கள் முன்னே ஒரு அற்புதம் செய்து நிகழ்த்தி வைத்ததும் 672 பாடல்களைக் கொண்ட பாபநாசத் தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திருத்தலத்தில் அமைந்துள்ள அமண்டூக தீர்த்தம் தவளைகள் வாழாத திருக்குளமாகத் திகழ்கிறது.  இது தவிர, மேலும் நான்கு தீர்த்தங்கள் உள்ளன.  அவை, பாபநாச தீர்த்தம், மனுசரண தீர்த்தம், மானத தீர்த்தம், மணிமுத்தாறு தீர்த்தம் ஆகும்.
சோழ மன்னன் கோப்பரகேசரி காலத்தில் அமைக்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட  பதினைந்து கல்வெட்டுக்கள் இத்திருத்தலத்தில் கண்டறியப்பட்டுள்ளன.  பிற்கால சோழ மன்னர்களாக பரகேசரியும், இராஜகேசரியும் இப்பகுதியினை ஆட்சி புரிந்துள்ளதை இத்திருத்தலத்தில் அமைந்துள்ள அவர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.  மேலும் அக்கல்வெட்டுக்களிலிருந்து பரகேசரியின் ஐந்தாம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் வீரசோழ ஆருடையானின் மனைவி மலைமான் பெருந்தேவியார்  கவிரநாதிசங்கரி  என்பவர் கிளிவனமுடையார்  கோயிலுக்கு நித்திய விளக்கேற்ற ஐந்து கழஞ்சு பொன் சேலத்தில் உள்ள ஊர்ச்சபையாரிடம் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவருகிறது.  மாசி மகத்திற்கு உணவளிக்க நாற்பது கழுஞ்சு பொன்னைக்  கொடையாக அளித்துள்ள விவரங்களும் இதிலே குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், சேலத்தின் அப்போதைய பெயர் இராசகிரிய சதுர்வேதிமங்களம் என்பதையும் அறிய முடிகிறது.  
இராஜகேசரி கல்வெட்டிலிருந்து, கொடும்பாளூர் மணிக்கிராமத்து வணிகன், மஞ்சள் மணியத்தாண்டன் மாசி நாளில்  அளித்த பொன் பற்றியும் அறிய முடிகிறது.  
ஸ்ரீ சுவர்ணாம்பிகையுடன் ஸ்ரீ சுகவனேசுவரர் அருள்பாலிக்கும் இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலம், சேலம் மாநகரின் மையப் பகுதியில், பேருந்து நிலையத்திலிருந்தும், தொடர்வண்டி நிலையத்திலிருந்தும் சுமார் அரை கி.மீ.  தொலைவில் அமைந்துள்ளது.  
ஓம் நமசிவாய.


Comments

Popular posts from this blog

உலகின் முதல் சிவன் ஆலயம் - உத்தரகோசமங்கை பற்றிய சிறப்புத் தகவல்கள்

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில்.மாசி பிரமோற்சவம் 7 ஆம் திருநாள், இரவு தங்க கிளி வாகனம் 13-2-2022 Kanchipuram Arulmigu Sri Kamakshi Amman Temple.Masi Brahmotsavam Day 7, night Thanga kili vaganam 13-2-2022