நாகதோஷம் போக்கும் திருத்தலங்கள்
நாகதோஷம் போக்கும் திருத்தலங்கள்
ஸ்ரீகாளஹஸ்தி
500 ஆண்டுகள் பழமையான இக் கோவில் திருப்பதிக்கருகே அமைந்துள்ளது.
சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றானது.இத்தலம் வாயுத் தலம் ஆகும்.
இறைவனுக்கு தன் கண்ணையே பறித்தளித்த வேடரான கண்ணப்ப நாயனாரால் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது.
இத்தலத்தில் சிலந்தி,பாம்பு,யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி(காளஹஸ்தி)என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.
வடமொழிப் புராணங்கள் பலவும் இக்கோவிலைப் போற்றுகின்றன.
இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர்,ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார். அகண்ட வில்வ மரம்,கல்லால மரம் ஆகிய இரண்டும் இக் கோவிலின் தல மரங்கள்.இந்த ஊருக்கு அருகில் பொன்முகலி என்ற ஆறு ஓடுகிறது.
தோஷ பரிகாரம் என்று கேட்டால் அங்குள்ள அர்ச்சகர்கள் வழிகாட்டி செய்து தருகிறார்கள்.
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
திருநாகேஸ்வரம்
தமிழகத்தில் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக உள்ளது.
நாக அரசனாகிய ராகு பூஜித்த காரணத்தால் இத்தலத்துக்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது.இங்கு நாகநாதசுவாமி,பிறையணி அம்மன்,கிரிகுஜாம்பிகை ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
கோவில் வெளிப்பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் ஸ்ரீ ராகு பகவான் நாகவல்லி,நாகக்கன்னி என இருதேவியருடன் எழுந்தருளியுள்ளார்.
சுசீல முனிவரின் குழந்தையை ராகு தீண்டியதால் ராகுவுக்கு சாபம் ஏற்பட்டது.இந்த சாபம் நீங்க மகாசிவராத்திரி தினத்தில் ராகு,திருநாகேஸ்வரத்தில் அருள்பாலிக்கும் நாகநாதசுவாமியை வழிபட்டார்.இதன்மூலம் சாபம் நீங்கியது.
சிவபெருமான் அருளால் தன் சாபம் நீங்கிய ராகு இத்தலத்தில் சிவனை வணங்கி தன்னை பரிகார வழிபாடு செய்
பவருக்கு தன்னால் ஏற்படும் அனைத்து தோஷங்களையும் நீக்குகிறார்.
காலசர்ப்பதோஷம்,சர்ப்பதோஷம்,களத்திரதோஷம்,புத்திரதோஷம் நீங்க ராகு பகவானுக்குப் பாலாபிஷேகம் செய்கின்றனர்.
இத்தலத்தில் ராகுவின் மேனியில் பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறுவது தனிச்சிறப்பு.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு தொடங்கி 6 மணி வரை பரிகார பூஜைகள் செய்ய கூட்டம் கூடுகிறது.திருமணம் நடைபெற வேண்டி திருநாகேஸ்வரம் கோவிலில் உள்ள வன்னி மரத்தில் பலர் தாலி கட்டுகின்றனர்.சிலர் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி தொட்டில் கட்டி வணங்குகின்றனர்.இதற்கு நல்ல பலன் கிடைக்கிறது.
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
சூரியனார் கோவில்
சூரியனார் கோவில் கும்பகோணத்திற்கு கிழக்கே அமைந்துள்ளது.
இத்தலம் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறைக்கு அருகில் உள்ளது.
திருப்பனந்தாள் மற்றும் கீழ் அணைக்கட்டிலிருந்து நேரடி சாலை வசதி உள்ளது.இக்கோவில் நான்கு பிராகாரங்களுடன் கூடிய சுற்று சுவருடன் நடுவே ராஜகோபுரத்துடன் எழும்பியுள்ளது.
ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு உள்ள புஷ்கரணியில் நீராடி கோள் தீர்த்த விநாயகரை வணங்கி,பின் நவகிரக நாயகர்களை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடவும்.
அர்ச்சனை செய்யும் போது மறக்காமல் பெயர்,ராசி மற்றும் என்ன காரணத்திற்காகப் பிரார்த்தனை என்பதை சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்யவும்.
பணம் செலவு செய்வதைவிட மனம் செலவு செய்து வழிபடவும்.தன் மீது உள்ள குறைகளைச் சொல்லி மன்னிப்புக் கேட்டு வழிபடவும்.ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யவும்.
திருமங்கலக்குடி
பிராணநாதேசுவரர் கோவில்.தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம்,திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பனந்தாள் செல்லும் பேருந்துகள் மூலம் இக்கோவிலுக்குச் செல்லலாம்.ஆடுதுறையிலிருந்து சுமார் 2.5கி.மீ. தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து சுமார் 13கிமீ தொலை
விலும் அமைந்துள்ளது. காளி,சூரியன்,பிரம்மன்,அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமென்பது நம்பிக்கை.
இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.வழக்கமாக லிங்கத்தின் பாணம் ஆவுடையார் (பீடம்)உயரத்தை விட சிறியதாக இருக்கும்.ஆனால் இக்கோவிலில் சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட உயரமாக அமைந்துள்ளது தனிச் சிறப்பு.
அம்மன் பெயர் மங்களாம்பிகை (அ) மங்களநாயகி.அம்மன் தனிச் சந்நதியில் தெற்கு நோக்கி வலது கையில் தாலிக்கொடியுடன் காட்சி தருகிறார்.
பிராகாரத்தில் சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன.
நவகிரகங்கள் சிவனை வழிபட்ட தலமென்பதால் நவகிரகங்களுக்கு இங்கு சந்நதி இல்லை.
இக்கோவிலில் வழிபட்ட பின்னரே இங்கிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள சூரியன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது முறைப்படுத்தப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம்
இராமேஸ்வரம் மிகச்சிறந்த தலமாகும்.இது ராகு ஈசனை வழிபட்ட தலம் என்கிறார்கள்.
முதலில் தேவிப்பட்டணத்தில் உள்ள நவக்கிரகங்களை வழிபட்டு பிறகு இராமேஸ்வரம் சென்று வழிபட்டால் ராகுதோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து வகையான கிரக தோஷங்களும் நீங்கும்.
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இராமேஸ்வரம் தலமும் ஒன்று.இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர்.
அவை முறையே வடக்கே பத்ரிநாதம்,கிழக்கே ஜகந்நாதம்,மேற்கே துவாரகநாதம்,தெற்கே இராமநாதம்.
இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும்.நான்காவதான இராமநாதம் ஒன்றே சிவஸ்தலம்.
இத்தலத்தில் இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார்.இந்த ஜோதிர்லிங்கம் சுவாமி சந்நதியின் முதல் கிழக்கு பிராகாரத்தில் உள்ள சிறிய சந்நதியில் இருக்கிறது.
அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது.அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
தென்மேற்கு மூலையில் சந்தான கணபதியின் சந்நதி அமைந்திருக்கிறது.ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது.இராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிராகாரங்களுக்கிடையே சேது மாதவர் சந்நிதி அமைந்துள்ளது.
தினமும் காலை 5 மணிக்கு ராமநாதசுவாமி சந்நதியில்,ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது.இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு.
பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீ சக்ரம் இருக்கிறது.
சக்தி பீடங்களில் இது ‘சேது பீடம்' ஆகும்.
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிராகாரம் ஆகும்.
உலகிலேயே மிக நீளமான பிராகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிராகாரம் உலகப் பிரசித்தி பெற்றதாகும்.
தென் காளஹஸ்தி
தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் புண்ணிய நதியான சுரபி நதி முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு திருக்காளத்தீஸ்வரர் திருக்கோவில்.
மதுரை நாயக்கர் அரசில் பிச்சை பிள்ளை என்பவர் கணக்குப் பிள்ளையாக இருந்தார்.இவர் காளஹஸ்தியில் எழுந்தருளியிருக்கும் காளத்தீஸ்வரரின் தீவிர பக்தர்.
ஆண்டுக்கு ஒரு முறை மகாசிவராத்திரி அன்று அங்கு சென்று வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.பல காலம் இப்படி காளஹஸ்தி சென்று வந்த பிச்சையால் வயது ஆன பிறகு நீண்ட பயணம் செய்தும் காளத்தி செல்ல முடியவில்லை என வருந்தினார்.உண்ணா நோம்பு இருந்தார்.
இறைவன் கனவில் தோன்றி காட்டூரில் அமைந்துள்ள வில்வ வனத்தின் வெள்ளை அரளி பூத்திருக்கும் மரத்தடியில் என்னை நீ கண்டு தரிசிக்கலாம் என்றார்.அடுத்த நாள் பிச்சைபிள்ளை அரளி பூத்திருந்த மரத்தடியில் பார்த்த போது இறைவன் லிங்க வடிவில் காட்சி தந்தார்.அங்கேயே வேத மந்திரம் முழங்க திருக்கோவில் அமைத்தார்.
இன்று இக்கோவில் சீரும் சிறப்புமாக விளங்குகிறது.ராகு,கேது தலமான இங்கு ஞாயிறு தோறும் ராகு காலத்தில் சர்ப்பதோஷ நிவர்த்தி,சாந்தி பூஜை நடைபெறுகிறது.
ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு நிகரான ஸ்தலமாகக் கருதப்படுவதால் இது தென் காளஹஸ்தி எனப் போற்றப்படுகிறது.இங்கு வந்து வழிபடுவோருக்கு ஜாதகத்தில் நாகதோஷம்,காலசர்ப்ப தோஷம்,ராகு திசை,கேது திசை,ராகு புத்தி,கேது புத்தி,களத்திரதோஷம்,புத்ர தோஷம் இருந்தால் பரிகாரம் செய்து கொள்கின்றனர்.
🐍திருப்பாம்புரம்🐍
இத்தலத்தில் ஓருருவாகி ஈசனை நெஞ்சில் இருத்தி ராகுவும்,கேதுவும் அருள் பெற்றார்கள் என்பது புராண வரலாறு.
ஆகையால் இத்தலத்திலுள்ள சுவாமி,அம்பாள் மற்றும் ராகு-கேதுவை வணங்குபவர்களுக்கு பாபங்கள் நீங்கப் பெறுகின்றன;நினைத்த காரியம் கை கூடுகிறது.
ராகுவும்,கேதுவும் கோவிலின் ஈசான்ய மூலையில் தனிச் சந்நதியில் எழுந்தருளியுள்ளார்கள்.ராகு கால வேளையில் இச்சந்நதியில் அபிஷேக அர்ச்சனை செய்வோர் தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறுகின்றனர்.
உலகைத் தாங்கும் ஆதிசேஷன் சுமையால் உடல் நலிவுற்று வருந்திய போது ஈசனின் ஆணைப்படி மகா சிவராத்திரியின் முதல் காலத்தில் திருக்குடந்தை நாகேஸ்வரரையும்,இரண்டாம் காலத்தில் திருநாகேச்வரம் நாகேஸ்வரரையும்,மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும்,நாலாம் காலத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு விமோசனம் பெற்றதாக புராணம் சொல்கிறது.
அதனால் திருப்பாம்புரத்தில் பாம்புகள் யாரையும் தீண்டுவதில்லை என்பது ஐதீகம்.
இன்றும் இவ்வூர் சுவாமி சந்நதி கருவறையில் அவ்வப்போது நாகம் வந்து வணங்குவதாக சொல்லப்படுகின்றது.அவ்வப்போது சுவாமியின் திருமேனியில் மாலை போல் சட்டையை உறித்து பாம்பு சென்று விடுவதே இதற்குச் சான்று.
சிவாச்சாரியார்கள் கருவறையில் நுழையும்போதே ‘நாகராஜா, நாகேச்வரா’என்று குரல் கொடுத்துக் கொண்டு தான் வருவார்களாம்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல்-பேரளம் வழியில் இருக்கிறது திருப்பாம்புரம்.ராகு பாதிப்பு கொண்டவர்கள் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக ராகுவினால் ஏற்பட்ட பாதிப்பு நீங்குகிறது.ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் கிடைக்கிறது.
Comments
Post a Comment