திருச்சோற்றுத்துறை அன்னபூரணி உடனுறை சோற்றுத்துறை நாதர்,. திருச்சோற்றுத்துறை, Thiruchotruthurai Arulmigu Chotruthurainathar temple



       அருள்மிகு  அன்னபூரணி   உடனுறை  சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்,திருச்சோற்றுத்துறை,      திருவையாறு வட்டம் தஞ்சை மாவட்டம்
   


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை, கண்டியூர் வழி, திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.



 தஞ்சாவூரில் இருந்து 13 கி.மி. தொலைவிலும், திருக்கண்டியூர் சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது. திருசோற்றுத்துறையில் இருந்து தெற்கே 3 கி.மி. தொலைவில் திருவேதிக்குடி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து திருசோற்றுத்துறை செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.

 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு: திரு மனோகரன் / திரு கண்ணன்: கைபேசி: 9943884377

மூலவர் – சோற்றுத்துறை நாதர், ஓதவனேஸ்வரர், தொலையாச்செல்வநாதர்
அம்மன் – அன்னபூரணி, தொலையாச்செல்வி
தல விருட்சம் – வில்வம்
தீர்த்தம் – காவிரி, சூரிய தீர்த்தம்
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – திருச்சோற்றுத்துறை
ஊர் – திருச்சோற்றுத்துறை
மாவட்டம் – தஞ்சாவூர்
மாநிலம் – தமிழ்நாடு
பாடியவர்கள் –  பதிகம்:- திருநாவுக்கரசர் - 4
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1

பதிகங்கள்:6.
1. செப்பநெஞ் -1 -28 திருஞானசம்பந்தர்
2.பொய்விராமேனி -4 -41 திருநாவுக்கரசர்
3.காலை எழுந்து -4 -85 திருநாவுக்கரசர்
4.கொல்லையேற்றினர் -5 -33 திருநாவுக்கரசர்
5.மூத்தவனாய் -6 -44 திருநாவுக்கரசர்
6.அழல்நீர் -7 -94 சுந்தரர்

 தல வரலாறு:-
ஒரு முறை நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட போது அருளாளன் என்ற சிவபக்தன் பசியால் வாடினான். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பசியால் துடித்தனர். வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், “என்னகொடுமை இது இறைவா? இப்படியா மக்களை பசியில் தவிக்க விடுவாய் . இது நியாயமா” எனச் சண்டை போட்டான். பசியின் கொடுமையால் கோயில் அர்ச்சகர் ஒரு மாதம் முன்பே வருவதை நிறுத்திவிட்டார். மாலையில் வந்து விளக்கு மட்டும் வைத்த ஊழியன், இரண்டு நாட்களுக்கு முன்னால் கீழே விழுந்துவிட்டான். விளக்கு கூட இல்லாமல் இருட்டில் கிடந்த சிவமூர்த்தத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அருளாளர், திடீரென்று வாயில்படியில் மோதி அழத் தொடங்கினார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது. அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுத்தார். “அருளாளா. இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு” என்று அசரீரி கேட்டது. இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும் நெய்யும் குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார். கடவுள் கண்ணத் திறந்துட்டார் என்று ஊர் மகிழ்ந்தது. இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப்பபிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. இது காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும். அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலமே ஏழூர் தலங்களில் ஒன்றான திருச்சோற்றுத்துறை சப்தஸ்தானத் தலங்களில் மூன்றாவது தலம். அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு “திருச்சோற்றுத்துறை” எனும் பெயர் ஏற்பட்டது. இத்தலத்ததை ராமலிங்க வள்ளலாரும், அருணகிரிநாதரும் போற்றியுள்ளனர். பிரம்மா, விஷ்ணு, இந்திரன், கவுதம முனிவர், சூரியன்ஆகியோர் வழிபட்டுள்ளனர். இத்தல இறைவனை வழிபட்டு இந்திரன் பதவி பெற்றான், கவுதமர் முக்தி பெற்றார்.
நந்தி பகவானுக்கும் வியாக்ரபாதரின் மகளான சுயம் பிரகாசைக்கும் பங்குனி மாதம் புனர்பூசத் திருநாளன்று மழபாடியில் திருமணம் நடைபெறும். சித்திரை மாதம் திருவையாறு பெருமானான ஐயாறப்பருக்கு பிரம்மோற்சவம். அதன்நிறைவு நாளில், நந்திதேவரையும், சுயாம்பிகையையும் வெட்டிவேர் பல்லக்கில் ஏற்றுவர். ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் கண்ணாடி பல்லக்கில் ஏற்றிக் கொள்வர். காலை ஆறு மணி சுமாருக்குத் திருவையாறில் புறப்படும் இந்த கோஷ்டி, முதலில் திருப்பழனத்துக்குச் செல்லும். அங்கு ஆபத்சகாயரும் பெரியநாயகியும் இவர்களை எதிர்கொண்டழைத்து உபசாரம் செய்வர். பின்னர், அவர்களும் சேர்ந்து கொள்ள, அடுத்த இடம் திருச்சோற்றுத்துறை. அதன் எல்லையிலேயே அவர்களை எதிர்கொண்டு அழைக்கும் சோற்றுத்துறைநாதரும் அன்னபூரணி அம்மையும் ஊருக்குள் அழைத்து போவார்கள். திருச்சோற்றுத்துறையில் வருபவர்களுக்கு எல்லாம் அன்னம் பாலிக்கப்படும். பின்னர் இந்த ஊர்வலம் திருவேதிக்குடி நோக்கித் தொடரும்.

 சப்த ஸ்தானத் தலம்: திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் மூன்றாவது தலமாகும்.
கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடனும், சுற்றிலும் மதிற்சுவருடனும் இவ்வாலயம் குடமுருட்டியாற்றின் கரையில் அமைந்துள்ளது. முகப்பு வாயலின் மேற்புறத்தில் சுதையாலான சிவனும், பார்வதியும் ரிஷபத்தின் மீது அமர்ந்தபடி காட்சி அளிக்கின்றனர். முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரம் உள்ளது. இந்த வாயிலுக்கு நேரே உட்பிரகாரத்திற்குச் செல்லும் வாயில் உள்ளது. இந்த வாயிலுக்கு முன் பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. கொடிமரம் இல்லை. கருவறை, மற்றும் உட்பிரகாரமும் நான்கு புறமும் மதிற்சுவருடன் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரங்கள் நான்கு புறமும் விசாலமாக உள்ளன. .வெளிப் பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியில் தனிக் கோயிலாக அம்பாள் சந்நிதி கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் ஒப்பிலாம்பிகை எழுந்தருளியுள்ளாள். இவருக்கு அன்னபூரணி என்ற பெயரும் உண்டு. அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய சிவனுக்கு தொலையாச் செல்வர் என்றும், அவருக்குள் பாதியாகி அருள்புரியும் அம்மைக்கு அன்னபூரணி என்றும் திருநாமங்கள். அம்மையை உளமார உருகி வழிபட்டால், வறுமையும் பிணியும் விலகி விடும்.
இரண்டாவது நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தால் அடுத்துள்ள பெரிய மண்டபத்தில் வலதுபுறம் நடராஜ சபை உள்ளது. இந்த மண்டபப் பகுதியிலிருந்து நேரே மூலவர் சந்நிதிக்குள் நுழைந்து விடலாம். தெற்காக கிழக்குப் பார்த்தபடி மகாவிஷ்ணு. அடுத்து, அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது. இத்தலத்திற்குச் சிறப்பு தரும் மூர்த்தியான இவர் தனிக்கோயிலில் காட்சி தருகிறார். அடுத்து இருபுறமும் கௌதமர் சிலையும் அவர் வழிபட்ட ஐதிகக்காட்சி செதுக்கப்பட்ட சிலையும் உள்ளது. அதிகார நந்தியை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால், மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் தாண்டி, உள்ளே நோக்கினால் அருள்மிகு சோற்றுத்துறைநாதர் எனும் தொலையாச் செல்வர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் அருட்காட்சி தருகிறார். தெற்கு வெளிப் பிரகாரத்தில் இருத்தும் இறைவன் கருவறை பகுதிக்குச் செல்ல வழி உள்ளது.

பதிகங்கள்:6.
1. செப்பநெஞ் -1 -28 திருஞானசம்பந்தர்

திருச்சோற்றுத்துறை
பண் :தக்கராகம்
பாடல் எண் : 1

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரொப்பர் பெருமா னொளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.

பொழிப்புரை :

நெஞ்சே, முறையான சிற்றின்பத்தைத் தன் முனைப்போடு `யான் துய்ப்பேன்` என்னாது,`அருளே துணையாக நுகர்வேன்` என்று கூற, இறைவர் அதனை ஏற்பர். அத்தகைய பெருமானார், ஒளி பொருந்திய திருவெண்ணீறு அணிந்த மேனியராய்த் தலைவராய் விளங்கும், திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம்.

2.பொய்விராமேனி -4 -41 திருநாவுக்கரசர்

திருச்சோற்றுத்துறை
பண் :
பாடல் எண் : 1

பொய்விரா மேனி தன்னைப் பொருளெனக் காலம் போக்கி
மெய்விரா மனத்த னல்லேன் வேதியா வேத நாவா
ஐவரா லலைக்கப் பட்ட வாக்கைகொண் டயர்த்துப் போனேன்
செய்வரா லுகளுஞ் செம்மைத் திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

வயல்களிலே வரால் மீன்கள் துள்ளித் திரியும் திருச்சோற்றுத்துறைப் பெருமானே ! வேதங்களால் பரம் பொருளாக உணரப்பட்டவரே ! வேதங்களை ஓதும் நாவினரே ! பொய்ப்பொருள்களே கலந்து அமைக்கப்பட்ட இவ்வுடம்பை நிலையான பொருளாகக் கருதி இதனைப் பேணுவதிலேயே காலத்தை வீணாக்கி மெய்ப் பொருளிலே பொருந்தும் சார்பு அற்றேனாய் ஐம்பொறிகளால் வருத்தப்பட்ட இவ்வுடம்பைக் கொண்டு மயங்கிக் காலத்தைக் கழித்துவிட்டேன் .

3.காலை எழுந்து -4 -85 திருநாவுக்கரசர்

திருச்சோற்றுத்துறை
பண் :
பாடல் எண் : 1

காலை யெழுந்து கடிமலர் தூயன தாங்கொணர்ந்து
மேலை யமரர் விரும்பு மிடம்விரை யான்மலிந்த
சோலை மணங்கமழ் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
மாலை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.

பொழிப்புரை :

காலையிலே எழுந்து நறுமணம் கமழும் தூய மலர்களைக் கொண்டு வந்து வானத்திலுள்ள தேவர்கள் விரும்பும் திருத்தலம் , நறுமண மலர்களால் வாசனை எங்கும் வீசும் சோலைகளை உடைய திருச்சோற்றுத்துறையாம் . அங்கு உகந்தருளியிருக்கும் சிவ பெருமானுடைய நீண்ட சடையில் வீற்றிருக்கும் பிறைச் சந்திரன்அல்லவோ எம்பெருமானுக்கு அழகிய அணிகலனாய் வாய்த்திருக்கின்றது

4.கொல்லையேற்றினர் -5 -33 திருநாவுக்கரசர்

திருச்சோற்றுத்துறை
பண் :
பாடல் எண் : 1

கொல்லை யேற்றினர் கோளர வத்தினர்
தில்லைச் சிற்றம் பலத்துறை செல்வனார்
தொல்லை யூழியர் சோற்றுத் துறையர்க்கே
வல்லை யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! முல்லை நிலத்துக்குரிய விடையேற்றினை உடையவரும், கொள்ளும் அரவத்தினை உடையவரும், தில்லைத் திருநகரில் சிற்றம்பலத்தே உறையும் அருட்செல்வரும், பழைய ஊழிக்காலத்தவரும் ஆகிய சோற்றுத் துறையர்க்கு வல்லமை உடையையாய்ப் பணிசெய்வாயாக.

5.மூத்தவனாய் -6 -44 திருநாவுக்கரசர்

திருச்சோற்றுத்துறை
பண் :
பாடல் எண் : 1

மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே
முறைமையால் எல்லாம் படைக்கின் றானே
ஏத்தவனாய் ஏழுலகு மாயி னானே
இன்பனாய்த் துன்பங் களைகின் றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

காலத்தால் எல்லாருக்கும் முற்பட்டவனே ! முறையாக எல்லா உலகையும் படைக்கின்றவனே ! ஏழுலகும் தாங்கு கின்றவனே ! இன்பம் தருபவனாய்த் துன்பங்களைப் போக்கு கின்றவனே ! முன்னே காத்தமை போல எப்பொழுதும் எல்லோரையும் காக்கின்றவனே ! தீவினையை உடைய அடியேனுடைய தீவினையை நீக்கியவனே ! திருச்சோற்றுத்துறையிலுள்ள விளங்கும் ஒளியை உடைய சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

6.அழல்நீர் -7 -94 சுந்தரர்

திருச்சோற்றுத்துறை
பண் :கௌசிகம்
பாடல் எண் : 1

அழல்நீர் ஒழுகி யனைய சடையும்
உழையீர் உரியும் முடையான் இடமாம்
கழைநீர் முத்துங் கனகக் குவையும்
சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

மூங்கில்களிடத்து உளவாகிய சிறந்த முத்துக்களும் , பொற்குவியல்களும் சுழிகளில் சுழல்கின்ற நீரையுடைய காவிரி யாற்றையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , நெருப்பு நீர்த் தன்மையுடையதாய் ஒழுகினாற்போலும் சடையையும் , மானையும் , யானை , புலி இவைகளை உரித்த தோலையும் உடையவனாகிய இறைவனது இடமாகும் .

திருச்சிற்றம்பலம்
 **************************************
அருள்மிகு  அன்னபூரணி   உடனுறை  சோற்றுத்துறை நாதர் திருவடிகள் போற்றி.  போற்றி.......
*********** திருச்சிற்றம்பலம்***********

Comments

Popular posts from this blog

உலகின் முதல் சிவன் ஆலயம் - உத்தரகோசமங்கை பற்றிய சிறப்புத் தகவல்கள்

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில்.மாசி பிரமோற்சவம் 7 ஆம் திருநாள், இரவு தங்க கிளி வாகனம் 13-2-2022 Kanchipuram Arulmigu Sri Kamakshi Amman Temple.Masi Brahmotsavam Day 7, night Thanga kili vaganam 13-2-2022