சிவபுராணம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் புண்ணிய தலம்
,
🙏சிவபுராணம்🙏
🌹பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் புண்ணிய தலம்🌹
நர்மதை நதி தீரத்தில் கர்ணகி என்றொரு நகரம் இருக்கிறது. அப்பட்டணத்தில் வசித்து வந்த அந்தணன் ஒருவன் காசி யாத்திரை போக விருப்பம் கொண்டான். அவனுக்கு இரு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் பத்திரமாகப் பாதுகாத்து வரும்படியும் விரைவிலேயே தான் திரும்பி விடுவதாகவும் மனைவியிடம் சொல்லி, விடை பெற்றுக் கொண்டு அவன் புறப்பட்டான்.
காசியை அடைந்ததும் அந்தப் பிராம்மணன் அங்கே சிறிது காலம் தங்க விரும்பினான். அவ்வாறு இருந்து வரும்போது ஒருநாள் அவன் காலம் முடிந்துவிட்டது.
கணவன் காசியில் இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் மனைவி பெரிதும் துக்கித்தாள். கணவனைப் பிரிந்து வாழ அவளுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. தன்னை நம்பி பாதுகாப்பில் விட்டுச் சென்ற இரு குமாரர்களையும் வளர்த்து ஆளாக்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்க அவள் உள்ளம் இடம் கொடுக்கவில்லை. ஆகவே அவர்கள் நலனுக்காகவே அவள் உயிர் வாழ வேண்டியதாயிற்று.
நாட்கள் கடந்தன. பிள்ளைகள் இருவரும் வளர்ந்து பெரியவர்களானார்கள். அவர்களுக்குத் தகுந்த பெண்களைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தாள் அவள். சொத்துக்களை இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்துத் தன் செலவுக்கும் சிறிது வைத்துக்கொண்டாள்.
இவ்வாறு இருக்க, சிறிது காலத்துக்கெல்லாம் அவள் அந்திமதசை நெருங்கியது. தான் அதிக நாட்கள் உயிரோடு இருக்க முடியாது என்பதை உணர்ந்ததும், அவள் தனக்காக வைத்திருந்த பொருள்களைத் தரும காரியத்தில் செலவிட்டாள். அவள் நடமாட்டம் ஒடுங்கியது; படுத்த படுக்கையானாள். கண்கள் பார்வை மந்தமாகியது; காது கேட்கவில்லை; பேசக் கூட முடியவில்லை. ஆகாரம் இறங்காததால் உடல் நாறாக மெலிந்து விட்டது.
தாய் படும் வேதனையைக் கண்ட புதல்வர்கள் இருவரும் மனம் வருந்தினர். எத்தனையோ தருமங்கள் செய்தும், தாய் தன் அந்திமக் காலத்தில் இவ்வாறு வருந்த நேருகிறதே எனத் துக்கித்தனர். ஒருநாள் புதல்வர்கள் இருவரும் படுக்கையில் இருந்த தாயை நெருங்கி "அம்மா, ஏதோ ஒரு குறைதான், தங்களை இப்படி வருத்துகிறது. மனதில் எது இருந்தாலும் அதைக் கூறினால் எங்களால் இயன்றவற்றைச் செய்கிறோம்" என்றனர்.
"குழந்தைகளே, எனக்குப் பெரிய மனக்குறை ஏதுமில்லை. உங்கள் தந்தையார் காசியில் காலகதி அடைந்து மோக்ஷத்தைப் பெற்றார். அவரோடு சென்று கங்கா ஸ்நானம் செய்ய வேண்டுமென விரும்பினேன். அன்றைய சூழ்நிலையில் அது நிறைவேறவில்லை. அவரோடு சென்றிருந்தால் நானும் காசியிலேயே உயிரை விட்டிருப்பேன். காசியில் தான் மரணம் கிட்டவில்லை. நான் இறந்த பின்னர் என் எலும்புகளை எடுத்துச் சென்று கங்கையில் சேர்ப்பீர்களா? அது ஒன்றுதான் என் உள்ளத்தில் நிறைந்திருக்கிறது!" என்றாள் அவள்.
" அம்மா, நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள், தாங்கள் சொன்னதைச் செய்யாது விடமாட்டோம்.தங்களின் எலும்புகளை அவசியம் கங்கையில் சேர்ப்பிப்போம்" என்றனர் புதல்வர்கள் இருவரும்.
அவள் தன் மூத்த மகனான சுவாதனை அழைத்து,சுவாதா,
நீதான் பெரியவன். ஆகவே நீதான் கங்கையை அடைந்து என் அஸ்தியைக் கரைக்க வேண்டும்" என்றாள்.
அவனும் அவ்வாறே செய்வதாக வாக்குக் கொடுத்தான். அந்த மன நிறைவிலே அவளும் இவ்வுலக வாழ்வை நீத்தாள்.
தாய்க்குச் செய்ய வேண்டிய கருமங்களை ஒரு குறையும் இல்லாது செய்து முடித்தான் சுவேதன். முதல் மாசியத்துக்குப் பிறகு, சேமித்து வைத்திருந்த தாயின் எலும்புகளை ஒரு துணியில் முடிந்து கொண்டு காசிக்குப் புறப்பட்டான். அவனோடு துணைக்காக ஒரு வேலைக்காரனும் புறப்பட்டான்.
காலையில் புறப்பட்ட இருவரும் வழி நடந்து அஸ்தமிக்கும் வேளையில் ஒரு கிராமத்தை அடைந்தனர். அன்றிரவு அக்கிராமத்திலுள்ள அந்தணன் ஒருவனின் வீட்டில் தங்கி காலையில் மீண்டும் புறப்பட நிச்சயித்தனர்.
சுவேதன் நீராடி சந்தியாவந்தனம் முதலியவற்றை முடித்துக்கொண்டு சிவ நாமங்களை ஜபித்துக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் வீட்டுக்காரன் பால் கறக்கப் பசுவின் கன்றை அவிழ்த்து விட்டான், அடுக்களையில் இருந்த மனைவியை அழைத்துப் பால் கறக்குமாறு சொல்லிவிட்டுக் கன்றை பிடித்துக் கொண்டு பசுவிடம் சென்றான். கன்று அவன் காலை மிதித்து விட்டது. அதனால் வலி பொறுக்க முடியாத அவன் கம்பினால் கன்றைப் பலமுறை அடித்து விட்டான். அப்போதும் அவன் கோபம் தீரவில்லை. பாலைக் கறந்து கொண்டதும், பாலூட்ட விடாமல் கன்றைப் பிடித்து இழுத்துக் கட்டி விட்டான். தொடரும்.....
Comments
Post a Comment